Wednesday, February 16, 2005

சிந்தித்து விடை கூறுங்கள்! --- சென்றைய பதிவின் விடைகள்

1. X என்பவருக்கு ஒரு பணியை முடிக்க 3 நாட்களும், Y என்பவருக்கு, அதே பணியை முடிக்க 6 நாட்களும் தேவைப்படுகின்றன. X, அப்பணியில், 2 தினங்கள் தனியாக ஈடுபட்ட பின், Y அவருடன் இணைந்து செயல்படத் தொடங்கினால், மீதி உள்ள பணியை முடிக்க எத்தனை நாட்களாகும் (X-ம் Y-ம் சேர்ந்து பணியாற்றும்போது, Y-இன் ஆற்றல் 20% கூடுகிறது என்றும், X-இன் ஆற்றல் 10% குறைகிறது என்றும் வைத்துக் கொள்ளும் பட்சத்தில்) ?

பதில்:
X இரண்டு தினங்களில் (2/3) பணியை முடித்திருப்பார். மீதி உள்ளது (1/3), அதாவது மூன்றில் ஒரு பங்கு பணி. அதை இருவரும் சேர்ந்து செய்யும்போது, Y-இன் ஆற்றல் 20% கூடுகிறது என்றும், X-இன் ஆற்றல் 10% குறைகிறது.எனவே, X ஒரு நாளில் 1/3-க்கு பதிலாக 1/3 * 90/100 = 3/10 பணி தான் செய்ய இயலும்.ஆனால், Y ஒரு நாளில் 1/6-க்கு பதிலாக 1/6 * 120/100 = 1/5 பணி (சற்று கூடுதலாக) செய்ய இயலும்!ஒரு நாளில் X-ம் Y-ம் சேர்ந்து பணியாற்றும்போது, 3/10 + 1/5 = 1/2 பணி செய்ய இயலும்.ஆனால், எஞ்சி இருப்பதோ 1/3 பணியே! அதை (1/3) / (1/2) = 2/3 தினங்களில் செய்ய இயலும்.



2. ஓர் அறையில் 3 விளக்குகளும், மற்றொரு அறையில் 3 சுவிட்சுகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சுவிட்சும் ஒரு விளக்குடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. ஓர் அறையிலிருந்து மற்ற அறையின் உள்ளே பார்க்க இயலாது. எந்த சுவிட்ச் எந்த விளக்குடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை எப்படி கண்டறிவீர்கள் என்பதே உங்களிடம் கேட்கப்படும் கேள்வி ?

விளக்குகள் இருக்கும் அறைக்கு நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவழிக்கலாம், எதையும் சேதப்படுத்தாமல்! அடுத்து, நீங்கள் சுவிட்சுகள் உள்ள அறைக்கு சென்றவுடன், சுவிட்சுகளை எத்தனை முறை வேண்டுமானாலும் சேதப்படுத்தாமல் இயக்கலாம், அவ்வறையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவழிக்கலாம். அவ்வறையை விட்டு வெளியேறியவுடன், மறுபடியும் நுழைய அனுமதி இல்லை!

அடுத்து, உடனேயோ அல்லது சற்று நேரங்கழித்தோ விளக்குகள் இருக்கும் அறைக்கு நீங்கள் செல்லலாம். ஆனால், அங்கு சென்றவுடன் இப்புதிருக்கான விடையைக் கூற வேண்டும்!!! விளக்குகள் இருக்கும் அறைக்குள் செல்லாமலேயும் நீங்கள் விடை கூறலாம்!!! அப்படிக் கூறினால், நீங்கள் மேதாவி என்று தாராளமாக ஒப்புக் கொள்ளலாம்!!!

//ஆளியுள்ள அறையிலிருந்து தானே மற்ற அறையைப் பார்க்க முடியாது. ஓர் ஆளியைப் போட்டுவிட்டு ஓடிப்போய் பார்த்துவிட்டு வரலாம். இப்படி 3 ஆளிகளுக்கும் செய்து கண்டறியலாம். //

2-வது வினாவுக்கு வசந்தன் விடை தருவதற்கு பதிலாக நக்கல் செய்கிறார் :-)

//2. இரண்டு ஸ்விட்சுகளையும் ஆன் செய்யுங்கள். இரன்டு நிமிடம் கழித்து ஒரு ஸ்விட்சை ஆஃப் செய்து விடுங்கள். இப்பொழுது அறைக்குள் நுழையுங்கள். ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அது ஆன் ஸ்டேட்டில் இருக்கும் ஸ்விட்ச்சுடன் இணைக்கப்பட்டது. மற்ற இரு விளக்குகளையும் தொட்டுப் பாருங்கள். சூடாக இருக்கும் விளக்கு, ஆஃப் ஸ்டேட்டில் இருக்கும் ஸ்விட்ச்சுடன் இணைக்கப்பட்டது. இன்னொன்று எதனுடனும் இணைக்கப்படாதது. //

யோசிப்பவர் குழம்பி விட்டார் என நினைக்கிறேன் :-) மொத்தம் இரண்டு ஸ்விட்சுகள் தான் என்ற முடிவுக்கு ஏன் வந்தார் எனப் புரியவில்லை! (மொத்தம் 3 ஸ்விட்சுகள் அல்லவா!). ஆனால், விடைக்கு மிக அருகே நெருங்கினார் எனலாம்!

பதில்:
மூன்றில், முதல் 2 ஸ்விட்சுகளை ON செய்யுங்கள். ஒரு 5 நிமிடம் கழித்து முதல் சுவிட்சை OFF செய்து விடுங்கள். இரண்டாவதை ON பொசிஷனிலேயே விட்டு விடுங்கள். மூன்றாவது சுவிட்சை தொடாதீர்கள்!

விளக்குகள் உள்ள அறைக்கு செல்லுங்கள். எரிந்து கொண்டிருக்கும் விளக்கு இரண்டாவது சுவிட்சுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதும், எரியாமல் உள்ள மற்ற 2 விளக்குகளில், தொட்டுப் பார்த்தால் சூடாக இருப்பது முதலாவது சுவிட்சுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதும், மற்றது மூன்றாவது சுவிட்சுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிறது அல்லவா ?


3. பொதுவாக, என்ன காரணத்தால் வட்ட வடிவ கழிவுக்குழி மூடிகள் (MANHOLES) சதுர வடிவத்தில் இருப்பவைகளை விட அதிக உபயோகத்தில் உள்ளன ?

//சதுர மூடிகள் அவற்றை டையாக்னலாகப் பிடித்தால் ஓட்டைக்குள் விழுந்து விழுந்து விடும். வட்ட மூடிகள் அவ்வாறு விழாது.//

சென்ற பதிவில் கேட்கப்பட்ட வினாக்களில், 3-வதற்கான சரியான பதிலை டோண்டு அவர்கள், அப்பதிவின் பின்னூட்டத்தில் இட்டு விட்டார்.

enRenRum anbudan
BALA

6 மறுமொழிகள்:

வசந்தன்(Vasanthan) said...

நான் நக்கலுக்குச் சொல்லேல. அதுவும் பதிலா இருக்கக் கூடிய சாத்தியம் இருக்குத்தானே. (இப்பிடிப் பதில்கள் முந்தி உம்மட பதிவில வரேலயோ? சுயபரிசோதனை தேர்வெல்லாம் என்னவாம்) சரி அத விடும். அதென்ன "சென்றைய"? "முந்தைய" அல்லது "நேற்றைய" அல்லது "சென்ற" பதிவு எண்டுதானே பாவிக்கிறனாங்கள்? உதென்ன சென்றய பதிவு? அண்ணே உங்களிட்டதான் இந்தச்சொல்ல முதல்ல கண்டிருக்கிறன். உந்தச்சொல் பாவனையில இருக்கே? அல்லது தவறாப் போட்டிட்டியளோ? பாவனையில இருந்தாச் சொல்லுங்கோ நானும் பாவிப்பன். புதுசாப் பாவிக்கிறதில ஒரு "இது" இருக்கு. எது எண்டு கேக்காதையுங்கோ.(அறையில் மறுபடி நுழைய அனுமதியில்லை என்ற நிபந்தனையைக் கவனிக்கவில்லை.)

யோசிப்பவர் said...
This comment has been removed by a blog administrator.
யோசிப்பவர் said...

மன்னிக்கவும்(சே! மன்னிப்பு கேக்குறதே பொழப்பா போச்சு!!!)!!! ஒரு அறையில் 3 விளக்குகளும் மற்றோரு அறையில் 2 சுவிட்சுகளும் என்று தவறாக(Pattern Recognitionனா இருக்குமோ!?!?) படித்து விட்டேன். அனாலும் என் விடை சரியே. கடைசி வரியை மட்டும் இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும். "நாம் கைவைக்காத சுவிட்சுடன் சூடாயில்லாத விளக்கு இணைக்கப்பட்டது."

enRenRum-anbudan.BALA said...

வசந்தன்,

//(இப்பிடிப் பதில்கள் முந்தி உம்மட பதிவில வரேலயோ? சுயபரிசோதனை தேர்வெல்லாம் என்னவாம்)//

சரி, ஒப்புக் கொள்கிறேன், நிம்மதியா?

//உதென்ன சென்றய பதிவு? அண்ணே உங்களிட்டதான் இந்தச்சொல்ல முதல்ல கண்டிருக்கிறன்.//

தவறு தான் :-(

என்றென்றும் அன்புடன்
பாலா

வசந்தன்(Vasanthan) said...

//சரிஇ ஒப்புக் கொள்கிறேன், நிம்மதியா?//

இந்தப் பதிலில் எரிச்சல் தெரியிறமாதிரிக் கிடக்கு. மனம் நொந்திருந்தா யோசிப்பவர் "......பொழப்பாப் போச்சு" எண்டதையே நானும் என்ர பிழைப்பாக்கிக் கொள்ளுறன்.
(திருப்பித் திருப்பி ஏதோ எழுதிக்கொண்டிருக்க வேண்டிக் கிடக்கு)

said...

//இந்தப் பதிலில் எரிச்சல் தெரியிறமாதிரிக் கிடக்கு. மனம் நொந்திருந்தா யோசிப்பவர் "......பொழப்பாப் போச்சு" எண்டதையே நானும் என்ர பிழைப்பாக்கிக் கொள்ளுறன்.
//

எரிச்சல் ஒன்றும் இல்லை :-) விளையாட்டுக்குத் தான் சொன்னேன், நண்பரே! எதற்கு மன்னிப்பெல்லாம்?

என்றென்றும் அன்புடன்,
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails